Press "Enter" to skip to content

கொரோனாவின் 2-வது அலைகளை தடுக்க முடியும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உலகின் 200 நாடுகளை பார்த்து விட்டது, கொரோனா வைரஸ்.

அதுவும் 6 மாத காலத்திற்குள் இதை கொரோனா வைரஸ் தொற்று சாதித்திருக்கிறது. இதனால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனாவுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடித்து சந்தைக்கு வரவில்லை. கொரோனா வராமல் தடுக்க தடுப்பூசி வந்திருக்கிறதா என்றால் அதுவும் பரிசோதனைகள் அளவில்தான் இருக்கின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் பல்லாயிரம் பேர் இந்த தொற்றுக்கு புதிது புதிதாக ஆளாகி வருகிறார்கள். மந்தை நோய் எதிர்ப்புச்சக்தி பெருகினால் மட்டுமே பரவல் குறையும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

இப்படி கொரோனாவின் முதல் சீசன், உலக நாடுகளை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியில் தள்ளாடி வருகின்றன. ஊரடங்கால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள உலக நாடுகள், சுகாதார வசதிகளையும், உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த பெருந்தொகைகளை செலவழிக்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையும் வந்து தாக்கும் என உலகளவில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது மேலும் பதைபதைப்புக்கு ஆளாக்கி உள்ளது.

இந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வை நடத்தி உள்ளனர்.

மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை, பொதுமுடக்க காலத்தின் முக கவச பயன்பாட்டுடன் இணைத்து, பல மாதிரிகளின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள், ராயல் சொசைட்டி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளான செயல்திறனுடன் வீட்டில் சாதாரணமாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய முக கவசங்கள் கூட, கொரோனா வைரஸ் தொற்று பரவலை அதிரடியாக குறைக்கும். அதற்கு ஒரு சிறிய நிபந்தனையும் இருக்கிறது. நமக்கு கொரோனா வைரஸ் தொற்றோ, தொற்றுக்கான அறிகுறிகளோ இருக்கிறதா, இல்லையா என்பதை பார்க்காமல், பெரும்பாலானவர்கள் முக கவசங்களை அணிந்து வாழ பழகி விட வேண்டும். இப்படி செய்கிறபோது, கொரோனா வைரஸ் பரவலை வியக்கத்தக்க அளவுக்கு குறைக்க முடியும்.

ஆய்வுக்கு தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் ஸ்டட்புரோம் கூறும்போது, “நாங்கள் நடத்திய பகுப்பாய்வானது, உடனடியாக உலகமெங்கும் அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்பதை ஆதரிக்கின்றன. மேலும், பொதுமக்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து கொண்டு, தனி மனித இடைவெளியை பராமரித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழியை வழங்கலாம். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே இது தடுப்பூசி போல வேலை செய்யும்” என்கிறார்.

பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் தோன்றிய பின்னர் மட்டுமே முக கவசங்கள் அணிவதைவிட, எப்போதெல்லாம் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் முக கவசங்கள் அணிந்து இருக்க வேண்டும். இது அவர்களுக்கு கொரோனா ஆபத்தை இரு மடங்கு குறைக்கிறது.

50 சதவீதமோ அதற்கு மேற்பட்டவர்களோ முக கவசங்களை அணிகிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை குறைக்கிறது. எதிர்கால அலைகளை தட்டையாக்குகிறது. குறைவான கட்டுப்பாடுகளுடனான பொது முடக்கத்தை அனுமதிக்கிறது.

பொதுவில் இருக்கும்போது அதிகமான மக்கள் முக கவசங்களை ஏற்றுக்கொண்டபோது, வைரஸ் பரவல் மேலும் குறைந்தது.

ஊரடங்கு இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி 100 சதவீத மக்களும் முக கவசங்களை எப்போதும் அணிந்து கொள்கிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும். தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையான 18 மாதங்களுக்கு மேலும் அதிகமாக கொரோனா மீண்டும் எழுவதை தடுக்கும்.

அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்ற கொள்கையானது, கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைகளை தடுக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »