Press "Enter" to skip to content

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்:

சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம், ரெயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரெயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டது.

புள்ளி விவரங்கள் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்?. கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தான் அதிக அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சேலம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் கொரோனா வேகமாக பரவிவிடும். தமிழகத்தில் அனைத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு விட்டது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »