Press "Enter" to skip to content

கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமை: சென்னை மாநகராட்சி ஆணையர்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆணையர் தெரிவித்ததாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வருங்காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 30 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அரசு பரிசோதனை மையங்களும், 18 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இம்மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்கள் எவ்வாறு சேகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.

அவ்வாறு மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வருகை தரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை அதற்கொன உருவாக்கப்பட்டுள்ள செயலி மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல், சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களை சேகரித்து அவர்களின் கையொப்பம் பெறுதல், குறிப்பாக பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர், அவரின் முழு முகவரி, வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர், கடந்த 15 நாட்களில் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இந்த விவரங்களை பரிசோதனை மையங்கள் மாநகராட்சிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பவரின் தொடர்புகளை மாநகராட்சி எளிதில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.

வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை கூடங்கள் பின்பற்ற வேண்டும். பரிசோதனைக் கூடங்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும்.

மேலும், பரிசோதனை மையங்களின் வாயில்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி பதாதைகள் வைக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளுக்கு சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை சேகரிக்கும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை அந்தந்த பரிசோதனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் ஆணையம் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »