Press "Enter" to skip to content

62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 8.5 கோடி ரூபாய் கட்டணம்

அமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ. 8,52,61,811 அளவுக்கு பில் கொடுத்ததால் அமெரிக்க முதியவர் ஒரு நிமிடம் ஆடிவிட்டார்.

உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதுவரை அங்கு 21,42,224 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8,54,106 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 16,744 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவரது மருத்துவமனைக் கட்டணம் தலைசுற்ற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மைக்கேல் ஃப்ளோர் என்ற நபர் 62 நாட்கள் கொரோனா வைரஸுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதில் 29 நாட்கள் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட அவருக்கு, 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் 3,000 மேற்பட்ட உபகரணங்களுக்கான கட்டணமும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 1.12 மில்லியன் டாலர் ( ரூ. 8,52,61,811) அவருக்கு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் கட்டணம் ஒரு நாளைக்கு 82 ஆயிரம் டாலர் என்ற வகையில் 29 நாட்களுக்குப் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 நாட்கள் தனிப்பட்ட அறையில் இருந்ததற்கான கட்டணம் ஒரு நாளைக்கு 9,736 டாலர் என்ற விதம் 4,09,000 டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

பிளோர் அரசின் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்ததால், அவரது கையில் இருந்து பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. இருந்தாலும் கட்டணத்தை பார்த்ததும் அவருக்கு ஒரு நிமிடம் தலைசுற்றிவிட்டது.

பிளோர் இதுகுறித்து கூறுகையில் ‘‘சுமார் ஒரு மில்லியன் டாலர் எனது உயிரைக் காப்பற்றியுள்ளது. அந்த பணம் நல்ல முறையில் செலவு செய்யப்பட்டதாக நான் கூறுவேன்’’ என்றார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »