Press "Enter" to skip to content

11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் புதிய திருப்பமாக, புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைல், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ‘உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை’ என அதில் கூறி உள்ளார்

இதை தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேரும் 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »