Press "Enter" to skip to content

சீன பொருட்களை புறக்கணிப்பது எளிதல்ல: குமாரசாமி கருத்து

சீன பொருட்களை புறக்கணிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும், அதற்காக உரிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சீன உற்பத்தி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நமது சந்தையை ஆக்கிரமித்துள்ள சீன பொருட்களுக்கு நம்முடைய உற்பத்தி மூலம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது சீனாவுடன் போட்டி போடுவோம் என்னும் திட்டத்தை அறிவித்தேன்.

இந்த திட்டத்தை அமல்படுத்த எனது தலைமையில் இருந்த கூட்டணி ஆட்சி மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கலபுரகி, சித்ரதுர்கா, ஹாசன், கொப்பல், மைசூரு, பல்லாரி, சிக்பள்ளாப்பூர், துமகூரு, பீதர் ஆகிய 9 மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது, சீன பொருட்களுக்கு கிடைக்கும் சந்தை வாய்ப்பை பறித்து, நமது உற்பத்தி பொருட்களுக்கு வழங்குவது தான் எனது நோக்கமாக இருந்தது. அந்த திட்டத்தை இந்த பா.ஜனதா அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்ததா?, இல்லையா? என்று எனக்கு தெரியாது.

நமது எல்லையில் சீனா தாக்குதல் நடத்திய பிறகு சிலருக்கு அந்த நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இப்போது ஞானோதயம் வந்துள்ளது. சீன பொருட்களை புறக்கணிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு உரிய திட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியம். நான் அறிவித்த அந்த திட்டமே அதற்கு சாட்சி.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »