Press "Enter" to skip to content

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

2018-19 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பீதியால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததாலும், நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் வருமான வரி, ஜிஎஸ்டி, மின் கட்டணம், வாகன வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்திருந்தது.

ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதியும் ஜூன் 30-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. வாகன வரி செலுத்தும் கால அவகாசத்தையும் ஜூன் 30 வரை நீட்டித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் நீடிக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு ஏதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2018-19ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 2019-20ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »