Press "Enter" to skip to content

கூட்டுறவு வங்கிகளை மைய கட்டுப்பாட்டு வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை ஏற்க முடியாது -மு.க.ஸ்டாலின் கண்டனம்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பொதுவான ஒரு அறிவிப்பை காரணம் காட்டி, மாநிலங்களில் உள்ள 1540 கூட்டுறவு வங்கிகளை (1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

நேற்றைய தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மாநில உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி – கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் கேலி செய்யும் மிகப் பின்னடைவான நடவடிக்கையாகும்.

ஏற்கனவே இதுதொடர்பாக வங்கிகள் வரன்முறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, மார்ச் 3-ம் தேதி மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் – கோவிட்-19 சூழலின் நெருக்கடியைப் பயன்படுத்தி, இதுபோன்றதொரு மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது!

கூட்டுறவு இயக்கம், வெகு நீண்ட காலமாக, மாநில மக்களுடன் – மாநிலத்தில் உள்ள அடித்தட்டு, கிராமப்புற மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது. விவசாயிகளுக்குப் பல வகையிலான கடன்களை வழங்கிட மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஓர் அமைப்பு. மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியே தற்போது கேள்விக்குறியாகியுள்ள சூழலில், மாநிலங்களில் – குறிப்பாக மாவட்ட அளவில் செயல்படும் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கூட, டெல்லியில் இருந்து, தொலைதூரக் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவும், அந்த வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் குழுக்களைக் கலைக்கும் அதிகாரம் பெறவும், ஓர் அவசரச் சட்டம் கொண்டு வருவதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு மாநில அரசுகள் விவசாயக் கடன் வழங்குவதற்குத் தடையாக இருக்கும். ஏன், பேரழிவில், பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடன்களைக் கூட ரத்து செய்ய முடியாத இக்கட்டான நிலையை மாநில அரசுகளுக்கு உருவாக்கும். எனவே, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய – மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத, ஆரோக்கியமற்ற செயலாகும்.

ஆகவே, மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அடிப்படையை மாற்றி – பா.ஜ.க. தனது சொந்த அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகக் கொண்டு வரப்படும் அவசரச் சட்ட முயற்சியை மத்திய பாஜக அரசு உடனே கைவிட வேண்டும்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்திலும், விவசாயப் பெருங்குடி மக்கள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்திடும் வகையிலும், முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திட வேண்டும். இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்துமாறு தேவையான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »