Press "Enter" to skip to content

சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புனே:

இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. 

குறிப்பாக, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீனப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது. பலர் சீன பொருட்களை தவிர்க்கத் தொடங்கி உள்ளனர். 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள கோண்ட்வே-தவாடே கிராம பஞ்சாயத்தில், சீனப் பொருட்களுக்கு தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் சீனப் பொருட்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். சீனப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்த முதல் கிராமம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் நிதின் திவாதி கூறுகையில், ‘சீனப் பொருட்கள் மீதான தடை குறித்து கிராம பஞ்சாயத்து ஒப்பந்தக்காரர்களுக்கும் தெரிவிக்கிறோம். இந்த விஷயங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். சீனப் பொருட்களின் விற்பனை மற்றும் கொள்முதலை தடை செய்யுமாறு இங்குள்ள மக்களுக்கும் கடைகளுக்கும் தெரிவிக்க உள்ளோம். இதற்கான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்ட உள்ளோம்’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »