Press "Enter" to skip to content

அதிசயம் ஆனால் உண்மை… இதுவரை கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சில மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்ற தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும், 8 வடகிழக்கு மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லை.

இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலத்தில், இந்த மாநிலங்களில் மருத்துவ பரிசோதனை வசதிகளோ, சிறப்பு ஆஸ்பத்திரிகளோ கிடையாது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை மொத்தம் 5,715 பேர் சிகிச்சைக்கு பின்னர் இந்த மாநிலங்களில் குணம் அடைந்துள்ளனர். 3,731 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்த வட கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை வெறும் 12 தான். மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களும் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளில் இருந்து இதுவரை தப்பி உள்ளன. இது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.

தற்போது வட கிழக்கு மாநிலங்கள் மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி அங்கு பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிராந்தியத்தில் பொதுத்துறையில் 39 பரிசோதனைக்கூடங்கள், தனியார் துறையில் 3 பரிசோதனைக்கூடங்கள் என மொத்தம் 42 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் அசாமில் 12, மேகாலயாவில் 7, நாகலாந்தில் 13, அருணாசலபிரதேசத்தில் 3, மணிப்பூர், மிசோரம், சிக்கிமில் தலா 2, திரிபுராவில் 1 பரிசோதனைக்கூடம் அடங்கும்.

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கென்று பிரத்யேக ஆஸ்பத்திரிகள் கிடையாது. இப்போது மத்திய அரசு உதவியுடன் 8 மாநிலங்களிலும் 1,518 இடங்களில் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 60 ஆஸ்பத்திரிகள், 360 சுகாதார மையங்கள், பராமரிப்பு மையங்களள் அடங்கும்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »