Press "Enter" to skip to content

ஓபிஎஸ். உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கு: ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 8-ல் மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். 

அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கிடையே, தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இதுகுறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில்  ஜூலை 8-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »