Press "Enter" to skip to content

சாத்தான்குளம் விவகாரம்- காவலர்களிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களை 3 நாட்கள் சிபிஐ விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை:

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கை கடந்த 10-ந் தேதி சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக அவர்கள் இந்த கொலை வழக்கு குறித்து சாத்தான்குளம், கோவில்பட்டியில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில் தங்களது விசாரணையின் ஒரு பகுதியை நிறைவு செய்த சி.பி.ஐ. போலீசார் 4 பேர், நேற்று மாலை 4.30 மணி மதுரைக்கு வந்தனர்.

அவர்கள் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு சென்று, சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் குறித்த வழக்கில் கைதானவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்தகுமார், விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  பின்னர் சிபிஐ காவல் கேட்ட மனு மீதான விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜாவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் விசாரணை நடத்த 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து 16ந்தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »