Press "Enter" to skip to content

கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சுங்கத்துறை

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேரை கொச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொச்சி:

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரமீசிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கப் பெற்ற பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், தங்கக் கடத்தல் தொடர்பாக கொச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டாட்டி ஹம்ஜத் அலி ஆகிய மூவரும் ரமீசுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். அவர்களை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 

அவர்கள் மூவரும் வியாபாரிகளுக்கு தங்கத்தை விற்பனை செய்து வந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ஜலால் மீது திருவனந்தபுரம், டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் பல்வேறு தங்க கடத்தல் வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர் சிக்காமல் இருந்த நிலையில் திங்கட்கிழமை இரவு பிடிபட்டார். 

மேலும், சரித், ஸ்வப்னா ஆகியோரால் கடத்தி வரப்பட்ட சுமார் 40  கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை ஜலால் மற்றும் அவரது குழுவினர் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்திருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »