Press "Enter" to skip to content

பணியாளர்களை சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் வெளியேற்றுகிறது ஏர் இந்தியா

ஏர் இந்தியாவில் வேலை செய்யும் பணியாளர்களில் சிலரை சுமார் ஐந்து வருடத்திற்கு கட்டாய விடுப்பில் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இந்திய அரசு நடத்தி வருகிறது. ஏர் இந்தியாவல் மிகப்பெரிய அளவிற்கு இழப்பு ஏற்படுவதால் தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மத்திய அரசு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 23-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கு இந்தியா தடைவிதித்துள்ளது. சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 1-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமான சேவை மே 25-ந்தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. என்றாலும் சுமார் 50 சதவீத விமானங்களே இயக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்காக பணியாளர்களை அதிரடியாக நீக்கியுள்ளது. அதனடிப்படையில் ஏர் இந்தியாவும் குறிப்பிடும் அளவிலான ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டாய விடுப்பு ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் சேர்மன் மற்றும் நிர்வாக டைரக்டருக்கு (CMD) சிறப்பாக செயல்படாத பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா போர்டு அனுமதி அளித்துள்ளது.

இதனால் பொருந்தக்கூடிய தன்மை, செயல்திறன், திறன், செயல்திறனின் தரம், பணியாளரின் ஆரோக்கியம், உடல்நலக்குறைவால் உடனடியாக வேலைக்கு வர இயலாதவர்கள் என்ற அடிப்படையில் பணியாளர்களை தரம் பிரித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

ஏர் இந்தியா சி.எம்.டி. ராஜிவ பன்சலால் பணியாளர்களை சம்பளம் இன்றி 6 மாதங்கள் அல்லது இரண்டு வருடத்தில் இருந்து ஐந்து வருடங்கள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப முடியும்.

ஏர் இந்தியாவின் தலைமையகத்தில் உள்ள துறைகளின் தலைவர், மண்டல டைரக்டர்களிடம் பணியாளர்களை மதிப்பிட்டு அதற்கான பட்டியலை அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜூலை  20-ந்தேதியில் இருந்து ஏர் இந்தியா அலுவலகங்கள் அனைத்து பயணியாளர்களுடன் இயங்கும். மருத்துவ சூழ்நிலை, கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கு குறித்து ஆலோசிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »