Press "Enter" to skip to content

மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு வழக்கில் 27-ந்தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிநீதி மன்றம் அறிவிப்பு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகளுக்கு 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.

சென்னை:

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அ.தி.மு.க., தி.மு.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தமிழக அரசு, புதுச்சேரி அரசு என்று தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். அதேநேரம் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது’ என்று வாதிட்டார். “மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது பெருமைக்குரியது” என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும். மத்திய அரசு, மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே ஆகும். இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்காததால் 2,700-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட தமிழக மாணவர்களின் இடம் பறிபோனது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொண்டிருக்கிறது’ என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகி, “மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியே எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான சுப்ரீம் கோர்ட்டு மற்றும் பல ஐகோர்ட்டுகளின் தீர்ப்புகள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும்” என்று வாதிட்டனர்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோட்டின் முந்தைய உத்தரவுகளுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், பிற மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆர்.தியாகராஜன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வக்கீல்கள் நன்மாறன், கே.பாலு, ரிச்சர்ட் வில்சன், தினேஷ், ஸ்டாலின் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற 27-ந்தேதி பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »