Press "Enter" to skip to content

நில அளவை கட்டணம் 10 மடங்கு உயர்வு- அரசாணை வெளியீடு

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் புல அளவீட்டு புத்தகம், எல்லைகள் நிர்ணயித்தல், வரைபடங்கள் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை:

நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், நில அளவை உட்பிரிவு அமைத்தால் மேல்முறையீடு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A4) 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A3)100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்வு. கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கட்டண உயர்வு. பராமரிப்பு நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்வு. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு 30 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்ட நன்செய் நிலத்திற்கு 50 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயும்,  மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட வரைபடத்திற்கான கட்டணம் 189 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான எல்லைக்கோடு வரைபட கட்டணம் 51 லிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்ட வரைபடத்திற்கான (வண்ணம்) கட்டணம் 357 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பத்து மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »