Press "Enter" to skip to content

கர்நாடகா, கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் -ஐநா அறிக்கை

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நியூயார்க்:

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய ஆசிய துணைக் கண்ட நாடுகளில் 150 முதல் 200 அல்-கொய்தா பயங்கரவாதிகள் அந்நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ், அல்-கொய்தா, அது தொடர்பான பயங்கரவாதிகள் மற்றும் தடை குறித்த 26-வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது:

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகார் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல் 200 அல்-கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும்.

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். ஐஎஸ்எல் அமைப்பின் இந்தியக் கிளை கடந்த 2019-ம் ஆண்டு மே 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் புதிய நிர்வாகப் பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செய்தி குறித்து வெளியிடும் அமாக் நியூஸ் ஏஜென்ஸியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு மொழியில் “விலையா ஆஃப் ஹிந்த்”(இந்திய நிர்வாகப் பகுதி) எனத் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »