Press "Enter" to skip to content

இந்தியாவில் 1600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை – அனுமதி கேட்டு விண்ணப்பம்

இந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்துவதற்கு அனுமதிகேட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்திய மருந்து நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், தடுப்பூசிக்கான எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட், மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேவை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிறுவனம், இந்தியாவில் வரும் ஆகஸ்டு மாதம் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்த்ததில் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியுடன், டி செல்களும் உற்பத்தியானது தெரிய வந்தது. இது இரட்டை பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தடுப்பூசி மீது மிகுந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’ தயாரித்து, இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்தையிடப் போவதாக இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

‘கோவிட் ஷீல்டு’ என்று இந்தியாவில் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் 2-வது, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்கான நடவடிக்கையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) இந்த நிறுவனம் நேற்று முன்தினம் விண்ணப்பித்து உள்ளது. இதையொட்டிய தகவல்கள் நேற்று வெளியாகின.

இந்த விண்ணப்பத்தின்படி, ‘கோவிட் ஷீல்டு’ தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தியை தீர்மானிக்க பொதுமக்களுக்கு சீரற்ற கட்டுப்பாட்டு ஆய்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

18 வயதான 1600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அடுத்த சில நாட்களில் இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டுக்கு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து தடுப்பூசி தளங்களையும், தடுப்பூசி செலுத்த வேண்டிய தன்னார்வலர்களையும் தேர்ந்தெடுத்து இறுதி செய்வார்கள்.

அந்த சோதனையின் முடிவுகளை தொடர்ந்து அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் இந்த தடுப்பூசியின் உற்பத்தி தொடங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »