Press "Enter" to skip to content

மாடுகளுக்கு பதில் மகள்களை பூட்டிய விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார் இந்தி நடிகர் சோனு சூட்

மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு இந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார்.

ஐதராபாத்:

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதில் ஏரில் தன் இரு மகள்களை நிலத்தில் பூட்டி உழவு செய்தார்.

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் நடத்தி வந்த டீக்கடை வியாபாரம்கொரோனா தொற்று பரவலால் நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.

உழவு மாடுகள் வாங்க பணமில்லாததால் தன் இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த இந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

இதுதொடர்பாக சோனு சூட் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு இந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »