Press "Enter" to skip to content

ரபேல் போர் விமானங்களை முழு திறனுடன் இயக்க இந்திய விமானிகள் தகுதியடைந்துவிட்டனர் – பிரான்ஸ் தூதர் தகவல்

ரபேல் போர் விமானங்களை அதன் முழு திறனுடன் இயக்க இந்திய விமானிகள் முழுமையாக தகுதியடைந்துவிட்டதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். 

இந்த ஒப்பந்தத்தின் முதல் படியாக கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சு அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மேலும், ரபேல் விமானங்களை எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பாக பிரான்சில் வைத்து இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டன. விமானங்கள் நாளை அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடைய உள்ளது. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானிகள் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ரபேல் போர் விமானங்களை அதன் முழு திறனுடன் இயக்க இந்திய விமானிகள் தகுதியடைந்து விட்டதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லினன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இம்மானுவேல் கூறுகையில்,’ரபேல் போர் விமானங்கள் மிகச்சிறப்பானவை. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களும், விமானிகளும் பிரான்சில் தங்கள் பயிற்சிகளை மிக அற்புதமாக நிறைவு செய்துள்ளனர். அவர்கள் ரபேல் போர் விமானங்களை அதன் முழு திறனுடன் இயக்க முழுமையாக தகுதியடைந்துவிட்டனர்’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »