Press "Enter" to skip to content

ராமர் கோவில் கட்ட குவியும் நன்கொடை

ராமர் கோவில் கட்ட நன்கொடை குவிந்து வருகிறது. தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் கொடுத்து வருகின்றனர்.

அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, முதலாவது வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த அறக்கட்டளைக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

கோவில் கட்டுமான பணிக்கு ரூ.500 கோடி முதல் ரூ.800 கோடிவரை தேவைப்படும் என்று கட்டுமான நிறுவனங்கள் முதல்கட்டமாக மதிப்பிட்டுள்ளன. ஒருவேளை, கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டால், கட்டுமான செலவும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன.

கடந்த 1992-ம் டிசம்பர் 6-ந் தேதி ராமஜென்மபூமி இடத்தில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையை பக்தர்கள் வழிபட்டு காணிக்கை செலுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம்வரை, இப்படி பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.11 கோடி, நிரந்தர வைப்புநிதியில் போடப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புக்கு உள்ளன.

பூமி பூஜைக்கு தனது மகன் பெயரில் ஒரு கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்குவதாக ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நகை வியாபாரி, ஊரடங்குக்கு முன்பே அறிவித்தார்.

உத்தரபிரதேச தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம், சமீபத்தில் ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு 34 கிலோ வெள்ளியை நன்கொடையாக வழங்கி உள்ளது. அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ், 5 வெள்ளி செங்கற்களை வழங்கி உள்ளார்.

மேலும், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கடந்த மார்ச் 25-ந் தேதி, சாமி சிலைகள் தற்காலிக கோவிலுக்கு மாற்றப்பட்டபோது, ரூ.11 லட்சம் நன்கொடை அளித்தார்.

அத்துடன், பாபா ராம்தேவ் உள்ளிட்ட பக்தர்களும், பிரபலமான துறவிகளும் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

முராரி பாபு என்பவர், கோவில் கட்டுமானத்துக்கு நேற்று ரூ.5 கோடி வழங்கினார்.

கடந்த 4 மாத கால ஊரடங்கு சமயத்தில், பக்தர்கள் ஆன்லைன் மற்றும் இதர வழிகளில் அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தி வந்தனர். இந்த தொகை ரூ.6 கோடியை தாண்டி உள்ளது.

இதுவரை ரொக்கமாக ரூ.22 கோடியும், ஏராளமான தங்கமும், வெள்ளி செங்கற்களும் நன்கொடையாக குவிந்திருப்பதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வெள்ளி செங்கற்களை வழங்கி உள்ளனர். ஆனால், கோவில் கட்டுமானத்துக்கு ரொக்கப்பணம் தேவைப்படுகிறது. எனவே, வெள்ளி செங்கற்களுக்கு பதிலாக, பணத்தை எங்கள் வங்கிக்கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »