Press "Enter" to skip to content

புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிநீதி மன்றம் பரபரப்பு கருத்து

புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை:

புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவரது மனைவி ஜமுனா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி மாநில குற்றவியல் வக்கீல் பரதசக்கரவர்த்தி ஆஜராகி, “மனுதாரர் கணவர் மீது 3 கொலை வழக்கு உள்பட கொலை முயற்சி, வழிப்பறி என்று 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், அவர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட மனுதாரர் தரப்பு வக்கீல் தமிழரசு, “மனுதாரர் மீது 2009-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையும் முடியாத நிலையில், அவரை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்” என்று வாதிட்டார்.

ஆவணங்களை எல்லாம் படித்து பார்த்த நீதிபதிகள், புதுச்சேரி மாநில போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

‘2009-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் எல்லாம் முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளன. அந்த வழக்குகளின் புலன்விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை. 11 ஆண்டுகளாக போலீசார் என்ன செய்கிறார்கள்?

அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான். இந்த குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்கவேண்டும். இந்த வழக்கில் 11 ஆண்டுகளாக ஏன் புலன்விசாரணையை முடிக்காமல் போலீசார் இழுத்தடித்து வருகின்றனர்? என்பது குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி டி.ஜி.பி.யை நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட நேரிடும். எனவே, விரிவான பதில் மனுவை போலீசார் தாக்கல் செய்யவேண்டும்” என்று கருத்து தெரிவித்து உத்தரவிட்டனர்.

மேலும், “சென்னை மாநகராட்சி எல்லையை விட குறைந்த எல்லை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் உடனுக்குடன் அரசு நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அங்கு கவர்னர், முதல் மந்திரி, எம்.எல்.ஏ.க்கள் என்று பெரிய மாநிலத்தில் இருப்பது போல் அனைவரும் இருக்கின்றனர். சிறிய பகுதியில் சிறப்பான நிர்வாகத்தை மேற்கொள்ளலாமே?” எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »