Press "Enter" to skip to content

33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் – கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம்

ஐதரபாத்தில் 33 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் தேர்வாகி உள்ளார்.

ஐதராபாத்:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. 

அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாசாவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33, 34 என பெற்று தோல்வியையே தழுவி வந்தார்.

இதற்கிடையே, இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறிவிட்டனர். அதனை ஏற்று அனைத்துப் பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார். ஹால் டிக்கெட்டும் வந்து விட்டது. தேர்வு எழுதவும் தயாராக இருந்தார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பாஸ் என தெலுங்கானா அரசு அறிவித்தது. இதையடுத்து, நூரூதினும் ஆல் பாஸ் ஆகிவிட்டார். இதனையடுத்து அவர் முதல் மந்திரி சந்திரசேகர ராவிற்கு நன்றி என கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »