Press "Enter" to skip to content

பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 2020 பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தங்களுடைய பதிவு எண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் உள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) தேர்வு முடிவு தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1  தேர்வில் மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49%  தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1 சதவிகிதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »