Press "Enter" to skip to content

மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை

திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பூந்தமல்லி:

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவேற்காட்டை அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எழிலரசி.

பூந்தமல்லியை சேர்ந்த இவர், ஊரடங்கால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதியும், வேலை பார்க்காமல் வீட்டில் இருந்தபடி சம்பளம் வாங்க விரும்பாமலும்தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களது வீட்டின் அருகே ஒரு இடத்தில் மாணவர்களை அமர வைத்து தினமும் 2 மணிநேரம் பாடம் நடத்தி அசத்துகிறார்.

பள்ளியில் பாடம் எடுப்பது போல மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து சமூக விலகளோடும், முககவசம் அணிந்தும், கைகளை சுத்தம் செய்தும், இறை வணக்கத்துடனும் பாடம் நடத்த தொடங்குகிறார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடப்பிரிவுகள் மட்டுமே எடுத்து விட்டு, அதில் இருந்து அவர்களுக்கு வீட்டுப்பாடமும் கொடுக்கிறார்.

இதுபற்றி ஆசிரியை எழிலரசி கூறியதாவது:-

இந்த மூன்று பாடப்பிரிவுகளை படித்தாலே ஓரளவு மாணவர்களை தேர்த்தி விடலாம். ஊரடங்கால் 4 மாதங்களாக படிக்காமல் இருக்கும் மாணவர்கள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து பாடம் நடத்தாவிட்டால் படிக்கும் திறனை இழப்பார்கள். விடுபட்ட பாடங்களை படித்தால் அடுத்த வகுப்புக்கு செல்லும்போது எளிமையாக இருக்கும்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியது என் மனதை உறுத்தியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தற்போது ஆங்காங்கே மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களது பெற்றோர் கொடுக்கும் இடத்தில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுக்கு வேண்டிய பிஸ்கட், மிக்சர் உள்ளிட்ட சிற்றுண்டிகளையும் ஆசிரியை எழிலரசி, கையோடு எடுத்து வந்து வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கிறார். இதனால் மாணவர்களும் அவரிடம் உற்சாகமாக படித்து வருகின்றனர்.

வாரத்தில் 5 நாட்கள் வகுப்பு நடக்கிறது. அரசு பள்ளி ஆசிரியையின் இந்த செயலை மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி அந்த பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »