Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் சிறையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் – 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது.

எனினும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும், தலீபான்களுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் அமைதியை திரும்ப கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினரையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை இலக்காக வைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசாத்துல்லா ஓராக்சாய் என்பவரை கடந்த சனிக்கிழமை அந்த நாட்டு ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஜலாலாபாத் நகரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

நேற்று முன்தினம் மாலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் அந்த காரை சிறைச்சாலையின் நுழைவாயில் மீது மோதி வெடிக்கச் செய்தார். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது.

அதனைத் தொடர்ந்து கார்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சிறைச்சாலைக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர்.

இதையடுத்து சிறை காவலர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய இந்த துப்பாக்கி சண்டை நேற்று காலை வரை நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் சிறை காவலர்கள் மற்றும் கைதிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் இந்தத் தாக்குதலை பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர். அவர்களில் பெரும்பாலானோரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த தாக்குதலில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »