Press "Enter" to skip to content

இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் தான். மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. காய்ச்சல் முகாம்கள் நடத்துவதுதான் தொற்று குறையக் காரணம். மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 4000 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

முகக்கவசம் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் பிளாஸ்மா சிகிச்சையில் 7 பேர் நலமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன் வரவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ இடங்கள் 150-ல் இருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு வழிவகுக்கக் கூடாது என்பதற்காகத்தான் கூடுதலாக ஒரு குழு அமைப்பு. தேவையின்றி வெளியூர் செல்லக்கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையில் இருக்கிறது.

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க வருவோருக்கு சென்னையை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது. கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனாவை எதிர்த்து அரசு கடுமையாக போராடியும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »