Press "Enter" to skip to content

அடுத்த மாதம் தமிழக சட்டசபை கூட்டப்படும் இடம் மாறுமா?- உயர் அதிகாரிகள் ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்ந்து நீடிப்பதால், அடுத்த மாதம் கூட்டப்பட வேண்டிய தமிழக சட்டசபையை வேறிடத்துக்கு மாற்றலாமா? என்பது பற்றி உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை:

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. சட்டசபை விதிகளின்படி, கூட்டத் தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இம்மாதம் ஆகஸ்டு 31-ந்தேதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதோடு, சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஊரடங்கு நீடிக்கவில்லை என்றாலும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை கண்டிப்பாக நீடிக்கப்படும் என்றே தெரிகிறது. எனவே தற்போது சட்டசபையில் சமூக இடைவெளியை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதனால் அங்கு அனைவருமே அமர இடமில்லாமல் போய்விடும்.

எனவே சட்டசபையை வேறிடத்தில் நடத்தலாமா? அதற்கு சென்னையில் எது உகந்த இடம்? என்பது பற்றி உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபமும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் சட்டசபை கூட்டத்தொடர் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளன. 1921-1937-ம் ஆண்டுகளில் சென்னை கோட்டையின் மேலவை மண்டபத்தில் சட்டசபை கூட்டப்பட்டது.

பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபம், அரசினர் தோட்ட விருந்தினர் மாளிகை, சென்னை கோட்டை பேரவை மண்டபம், கலைவாணர் அரங்கம், உதகமண்டலம் அரண்மூர் மாளிகை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த புதிய தலைமைச் செயலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் தமிழக சட்டசபை கூட்டப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »