Press "Enter" to skip to content

32 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு – இந்திய மருத்துவ சங்கம் தகவல்

32 டாக்டர்கள் கொரோனாவால் இறந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை:

இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, மாநில செயலாளர் ஏ.கே.ரவிக்குமார், மாநில இணை செயலாளர் டாக்டர் எஸ்.கார்த்திக் பிரபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கொரோனாவை எதிர்த்து சிறப்பாக போராடி வருகிறது. அதேநேரத்தில் இந்திய மருத்துவ சங்கத்திற்கு சில கோரிக்கைகள் உள்ளது. மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டுதல்களும் விலை உயர்ந்தவை என்பதால் இவை அனைத்தும் நோயாளிகளின் கட்டணத்தில் பிரதிபலிக்கிறது.

எல்லா கஷ்டங்களை மீறி டாக்டர்களும், பணியாளர்களும் மருத்துவ சேவை செய்கிறார்கள். எங்களுடைய இந்திய மருத்துவ சங்க மூத்த உபத்தலைவர் டாக்டர் கோதண்டராமனை இழந்து இருக்கிறோம். அவர் கடைசி வரை மருத்துவ சேவை ஆற்றினார். நாங்கள் சேகரித்த தகவலின்படி, 32 டாக்டர்கள் கொரோனாவால் இறந்து இருக்கிறார்கள். கொரோனா அறிகுறிகளுடன் 15 டாக்டர்கள் இறந்துள்ளனர். சித்த மருத்துவர் ஒருவரும் இறந்துள்ளார். கொரோனா அல்லாத காரணங்களால் கடந்த 3 மாதத்தில் 11 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவை எதிர்த்து போராடி உயிரை இழக்கும் டாக்டர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் உயிரை இழக்கும்போது தகுந்த மரியாதை கிடைக்கவில்லை. முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.50 லட்ச நிதியுதவியை உயிர் இழந்த தனியார் டாக்டர்களுக்கும் அளிக்க வேண்டும்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்காகவே தங்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, சேவையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். டாக்டர்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »