Press "Enter" to skip to content

வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை:

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. மூத்த அமைச்சர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியதோடு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் மாறி மாறி சந்தித்து நடத்திய தொடர் ஆலோசனைகளால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று நடைபெற்ற ஆலோசனைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம்.

கட்சி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக கூறிய கருத்துக்கள் விவாதப் பொருளாகிவிட்டன. அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

தொண்டர்களின் மன உணர்வை எதிரொலிக்கும் வகையில் கட்சி தலைமை உரிய நேரத்தில் சிறப்பான முடிவுகளை எடுக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »