Press "Enter" to skip to content

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து: பக்தர்கள் இணையதளத்தில் பார்கலாம்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாகவும், திருக்குடைகளை 22-ந்தேதி நேரில் வழங்க இருப்பதாகவும் கோபால்ஜி தெரிவித்துள்ளார். திருக்குடை வைபவங்களை பக்தர்கள் இணையதளத்தில் தரிசிக்கலாம்.

சென்னை:

இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இருந்து இரண்டு வகையான மங்களப்பொருள்கள், ஆண்டுதோறும் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

வரும் 22-ந்தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், சென்னையில் சென்னை கேசவ பெருமாள் கோவில் தொடங்கி, சென்னை, திருவள்ளூர் வழியாக திருமலை வரை செல்லும், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது.

முன்னதாக, சமர்ப்பிக்கப்பட உள்ள 11 அழகிய வெண் பட்டு திருகுடைகளுக்கும், 19-ந்தேதி பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில், யாக பூஜைகள் நடக்கின்றன. 20-ந்தேதி பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதனை தொடர்ந்து 22-ந்தேதி திருச்சானூர் தாயார் கோவிலில் 2 திருக்குடைகளும், திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அரசின் கட்டுப்பாடு காரணமாக, இந்த 3 ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கு, திருக்குடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகளை, TirupatiKudai மற்றும் rrgopaljee28 என்ற முகநூலிலும், RR. GOPALJEE என்ற யூடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தர்கள் திருக்குடை பூஜைகளை தரிசிக்கலாம்.

மேலும், இந்த ஆண்டு, திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்பட்ட காரணத்தால், வரும் 19-ந்தேதி திருப்பதி திருக்குடை கமிட்டியினர் மற்றும் பக்தர்கள், தங்கள் பகுதியில், அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று, ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும். அன்றைய தினம், ஓம் நமோ நாராயணாய திருநாமத்தை 1,008 முறை உச்சரித்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் பாரத நன்மைக்காக, சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அன்னதானம் பேக்கிங் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »