Press "Enter" to skip to content

நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் 11 மொழிகளில் 15.97 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமுடன் இந்த தேர்வை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியா முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது. இந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகளை மத்திய கல்வி வாரியம் மேற்கொண்டது. தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை (எம்.டி.ஏ.) பல்வேறு நடவடிக்கைகளை கூறியிருந்தது. அதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இத்தகைய கடும் கட்டுப்பாடுகள், பரிசோதனைகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

‘நீட்’ தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. என்றாலும் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் இன்று காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கி விட்டனர். மாணவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து வந்திருந்தனர்.

பெரும்பாலான மாணவர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய சானிடைசர் எடுத்து வந்திருந்தனர். மேலும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுடன் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது.

அடையாள அட்டை வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், ஹேர்பின் போன்றவை அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அரைக்கை சட்டை, சாதாரண செருப்பு அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே மாணவர்கள் அதற்கேற்ப சாதாரணமாக வந்தனர்.

செல்போன் உள்பட எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப மாணவர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டன.

மதியம் 11 மணி முதல் மாணவர்கள் தேர்வுக்கூடங்களுக்குள் ஒவ்வொருவராக செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. அதே போன்று மாணவர்கள் தங்களது கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்திக் கொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காய்ச்சல் அறிகுறி உள்பட வேறு ஏதேனும் அறிகுறி இருந்த மாணவர்கள் தனியாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டது.

மதியம் 2 மணிக்கு ‘நீட்’ தேர்வு தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்காக சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன

மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக வந்து செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு அவர்களுக்கான அறைகள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டன.

மாணவர்களுக்கு பிரத்யேகமாக முகக்கவசங்கள், பேனாக்கள் வழங்கப்பட்டன. அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவர்கள் வரிசையாக செல்வதற்கு ஏற்ப தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிந்தது.

இன்று மாலை தேர்வு முடிந்ததும் நாளையில் இருந்தே திருத்தும் பணி தொடங்கும். இந்த மாத இறுதியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »