Press "Enter" to skip to content

அதிகமான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனைக்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார் – டிரம்ப் சொல்கிறார்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் மோடி என்னை பாராட்டினார் என்று டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், நவம்பர் மாதம் நடக்கிறது. தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

நெவடா மாகாணம் ரெனோ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

அமெரிக்காவில் 4 கோடியே 40 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்துள்ளோம். இது இந்தியாவை விட அதிகம். பல்வேறு பெரிய நாடுகள் செய்த பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.

இந்தியாவில் 150 கோடி மக்கள் இருக்கிறார்கள். கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது.

இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, கொரோனா பரிசோதனையில் அமெரிக்கா சிறப்பாக பணியாற்றி இருப்பதாக என்னை பாராட்டினார். அதற்கு நான், இதை இந்த நேர்மையற்ற ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு கூறினேன்.

அமெரிக்காவில் இதற்கு முன்பு ஜனநாயக கட்சி ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய வேட்பாளர் ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தார். அப்போது, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வி அடைந்தார். மற்ற மாகாணங்களை விட நெவாடா தான் அதிகமாக பாதிக்கப்பட்டது.

அவர் பொறுப்பில் இருந்தபோது, சீன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வந்திருந்தால், இப்போது இருப்பதை விட பல்லாயிரக்கணக்கானோர் கூடுதலாக பலியாகி இருப்பார்கள். மோசமான, பலவீனமான, பொருளாதார மந்தநிலையில் இருந்து மெதுவாக மீண்ட ஒரு அரசில்தான் அவர் துணை ஜனாதிபதியாக இருந்தார். நீங்கள் எதிர்பார்க்கும் வேட்பாளர் அவர் அல்ல.

கடந்த 4 ஆண்டுகளாக நான் அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புகளை திரும்ப கொண்டு வந்தேன். எல்லைகளை பலப்படுத்துவது, ராணுவத்தை மறுகட்டுமானம் செய்வது, சீனாவை எதிர்த்து நிற்பது என்று செயல்பட்டுள்ளேன்.

நாங்கள் சீனாவை எதிர்த்து நின்றதுபோல், இதற்கு முன்பு யாருமே எதிர்த்து நின்றது இல்லை. ஜோ பைடன் வென்றால், அவர் இடதுசாரி பழமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவார். அவர் இப்போதே நாட்டை இடதுசாரி கும்பலிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.

ஜோ பைடன் வெற்றி பெற்றால், சீனா வெற்றி பெற்றதாக அர்த்தம். இடதுசாரி கும்பல் வென்றதாக அர்த்தம். கலவரக்காரர்கள், அராஜகவாதிகள், தேசிய கொடி எரிப்பவர்கள் ஆகிய அனைவரும் வெற்றி பெற்றதாக அர்த்தம்.

அவரை தோற்கடிக்க இந்த தேர்தல்தான் ஒரே வழி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அரசியலில் அவர்தான் மிக மோசமான வேட்பாளர்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »