Press "Enter" to skip to content

இன்று மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நேற்றே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

இன்று மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் நேற்றே பொதுமக்கள் குவிந்து, காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

ஸ்ரீரங்கம் :

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை ஆகும். அன்று அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

ஆனால் தற்போது கொ ரோனா பரவலை தடுக்கும் வகையில் வரும் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அமாவாசை தினமான இன்று (வியாழக்கிழமை) அம்மாமண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தர்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை கமிஷனர் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு தான் அமாவாசை தொடங்கியது. ஆனால் அம்மாமண்டபத்தில் நேற்று காலையிலேயே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திதி கொடுக்க வந்தவர்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூடியிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் துறையினர் அங்கு சென்று பொதுமக்களை முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். மேலும் இன்று அம்மாமண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார படித்துறையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் காவல் துறையினர் போரிஅட்டை மூலம் தடுப்புஅமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »