Press "Enter" to skip to content

ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி- நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

ஹர்சிம்ரத் கவுர் பாதல் வசம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையானது மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிரோமணி அகாலிதளமும் இடம் பெற்றிருந்தது. இந்த கட்சிக்கு மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கிறார். மற்றொரு உறுப்பினரான அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை மந்திரியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் மக்களவையில் நேற்று பேசிய அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அறிவித்தார். ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினாலும் மத்திய அரசுக்கு சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவு தொடரும் என்றும் அப்போது அவர் கூறினார்.

அவர் இவ்வாறு பேசிய சிறிது நேரத்தில் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதலின் முதன்மை ஆலோசகர் ஹர்சரண் பெய்ன்ஸ் எடுத்துச் சென்று பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். மோடி அரசில் இருந்து விலகியதை ஹர்சிம்ரத் கவுர் டுவிட்டரிலும் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும், விவசாயிகள் மகளாகவும், சகோதரியாகவும் இருப்பதில் தான் பெருமை கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஹர்சிம்ரத் கவுர் பாதல் வசம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »