Press "Enter" to skip to content

புனேயில், நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை

புனேயில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கும் என இன்ஸ்டிடியூட் வட்டாரங்கள் தெரிவித்தன.

புனே:

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்று உள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்து விட்டது.

இதைத்தொடர்ந்து புனேயில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3-ம் கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்காக நேற்று முதல் தன்னார்வலர் பதிவு நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியது. இதில் 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில், இதற்காக ஏற்கனவே பலர் முன்வந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை முடித்து பெரும்பாலும் நாளை (திங்கட்கிழமை) முதல் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கும் என இன்ஸ்டிடியூட் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்த தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகளை அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் நிறுத்திவைத்தது. எனவே இந்தியாவிலும் இந்த தடுப்பூசி பரிசோதனைகளை நிறுத்துமாறு கடந்த 11-ந்தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அறிவுறுத்தி இருந்தார். பின்னர் மீண்டும் 15-ந்தேதி முதல் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »