Press "Enter" to skip to content

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் இரண்டு வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. 

வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் இன்று 2 வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

மசோதாக்களை தாக்கல் செய்து அவர் பேசுகையில், ‘இந்த மசோதாக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (எம்.எஸ்.பி) எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியளிக்கிறேன். எம்எஸ்பி முறை தொடரும். வேளாண் மசோதாக்கள் தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டு மசோதாக்களும் வரலாற்று சிறப்பு மிக்கவை, அவை விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும்’ என்றார்.

வேளாண் மசோதாக்களுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை 3 நாட்கள் தொடர் தொடர் வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »