Press "Enter" to skip to content

ரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை தொடர்ந்து, ரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், 5 ரபேல் போர் விமானங்கள் ஜூலை மாதம் 29-ந் தேதி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 10-ந் தேதி விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் ரபேல் கொள்முதல் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், ரபேல் போர் விமானங்கள் தொடர்பான 30 சதவீத உயர் தொழில்நுட்ப விவரங்களை இந்திய ராணுவ மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்புக்கு வழங்குவதாக பிரான்சின் இரு நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாக்குறுதி அளித்ததாகவும், அவை வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் அதே சமயம், உயர் தொழில்நுட்ப தகவல்களை ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் என்பதுதான் வாக்குறுதி என்றும், முதல் 3 ஆண்டுகளுக்குள்ளேயே வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த அறிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பிரான்சு நிறுவனம் உயர் தொழில்நுட்பங்களை வழங்குவது தொடர்பான தனது கடமையை கடந்த 23.9.2019-ந் தேதி தொடங்கி 23.9.2020-ந் தேதிக்குள் நிறைவேற்றி முடித்து இருக்க வேண்டும். அந்த கடமையை சம்பந்தப்பட்ட நிறுவனம் நிறைவேற்றி விட்டதா என்பதை மத்திய அரசு தெரிவிக்குமா? மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை புழுக்களை வெளிக்கொண்டு வருவதாக இருக்குமா?

ரபேல் போர் விமானங்களை விற்பனை செய்யும் நிறுவனம், போர் விமானம் தொடர்பாக தொழில்நுட்ப விவரங்களை வழங்குவது உறுதி செய்யப்படவில்லை என்பது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் ஊடகப்பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரபேல் போர் விமான தொழில்நுட்ப விவரங்களை வழங்குவது தள்ளிப்போடப்பட்டு உள்ளது என்றும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் பிரான்சில் தயாரிப்போம் என்று மாறி இருப்பதாகவும், இப்போது மோடி என்ன சொல்லப்போகிறார்? என்றும் கூறி இருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »