Press "Enter" to skip to content

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும்- தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைப்பதற்கு ஆண்டு கணக்கில் தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வந்தன. தமிழக
அரசின் சட்டப்போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததை அடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு
அமைக்கப்பட்டது.

இந்த இரண்டு அமைப்புகளுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம்
டெல்லியில் உள்ளது. இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் 2018-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் நடந்தது.

அதைத் தொடர்ந்து இதுவரை 8 ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் தரப்பட வேண்டிய காவிரி நீரின் அளவு,
மேகதாது அணை விவகாரம் போன்றவை இந்த கூட்டங்களில் முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆணையத்தின் 9-வது கூட்டம் நேற்று நடைபெற்றது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த
கூட்டம் நடந்தது. அங்கிருந்தபடி ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் பங்கேற்றார்.

தமிழகத்தின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், காவிரி
தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கர்நாடகா மாநிலம் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங், கேரளா மாநிலம் சார்பில் நீர் பாசனத்துறை தலைமைப்
பொறியாளர், புதுச்சேரி சார்பில் அந்த மாநில தலைமைப் பொறியாளர், மத்திய அரசின் சார்பில் ஆணையத்தில் உறுப்பினராக உள்ள
தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் பொதுவாக வழங்கப்பட வேண்டிய காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் தண்ணீர் திறப்பு குறித்து விவாதம் நடைபெற்றது.

தமிழகத்துக்கு கர்நாடகா இதுவரை வழங்கிய நீரின் அளவு பற்றியும், இதுவரை வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கும் நீரின் அளவு பற்றியும்
தமிழக அதிகாரிகள் விவாதித்தனர். மேலும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், மேகதாதுவில்கர்நாடகா அரசு கட்ட முயற்சிக்கும் அணை மற்றும் நீர் மின் திட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின்
சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைக்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »