Press "Enter" to skip to content

பள்ளிக்கூட பாடங்களை குறைப்பது குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்து அறிவிப்பார்- அமைச்சர் தகவல்

பள்ளிக்கூட பாடங்களை குறைப்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து அறிவிப்பார் என அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்:

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திகடவு- அவினாசி திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து
பள்ளிக்கல்விதுறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 1-ந் தேதி முதல் பெற்றோர்களின்
ஒப்புதலை பெற்று தங்களது சந்தேகங்களை தீர்க்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அரசு ஆணையில் கூறப்பட்டு உள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த அறிக்கை முதல்- அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பாடங்களை குறைப்பது குறித்து முதல்-
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து அறிவிப்பார்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாத இறுதி வரை நடக்கும். மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்தால் காலஅவகாசம் நீட்டிப்பு
செய்யப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவதற்கு விலக்கு அளிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை தான்
முடிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்களை 14474 உதவி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம். காலை 8 மணி முதல் மாலை 5
மணி வரை மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு வழங்கிய ஷூ, சாக்ஸ், புத்தகப்பை
உள்ளிட்ட 14 பொருட்கள் முறையாக சென்றுள்ளதா? என சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அக்டோபர் 1-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், தனியார்
பள்ளிக்கூடங்கள் என அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »