Press "Enter" to skip to content

அர்மீனியா – அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது – 100-க்கும் மேற்பட்டோர் பலி

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே முழுமையான போர் மூண்டுள்ளது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

யெரிவன்:

அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். 

இந்த இரு நாடுகளும் இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. 

இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். 

சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது.

இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. 

அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. 

இதற்கிடையில், பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) முதல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியது. 

அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் ராணுவம் முதல் தாக்குதலை நடத்தியது. 

இதற்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சண்டையில் அர்மீனிய ராணுவமும் நேரடியாக இறங்கியுள்ளது.

இதனால், நகோர்னோ-கராபத் மாகாணத்தில் அர்மீனிய ஆதரவு படையினருக்கும் – அசர்பைஜான் நாட்டின் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அர்மீனிய ஆதரவு படையினருக்கு அர்மீனிய ராணுவம் உதவி செய்து வருகிறது. 

இந்த மோதலில் அசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்து வருகிறது.

குறிப்பாக அர்மீனியாவின் சூகோய் ரக போர் விமானத்தை அசர்பைஜானின் F-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக அசர்பைஜான் படையினரின் தளங்களை குறிவைத்து அர்மீனியா அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இதனால், சிறுசிறு மோதலாக தொடங்கிய சண்டை தற்போது அர்மீனியா – அசர்பைஜான் இடையே நேரடி மற்றும் முழுமையான போராக மாறியுள்ளது. இந்த சண்டையில் நகோர்னோ-கராபத் தன்னாட்சி மாகாணத்தின் படையினரே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். 

நகோர்னோ-கராபத் கிளர்ச்சி படையினர், அர்மீனிய அரசு, அசர்பைஜான் அரசு என 3 தரப்பினரும் போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு விதமான பலி எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது என்பது 

உறுதியாகியுள்ளது.

அர்மீனிய அரசு தரப்பு வெளியிட்ட விவரங்கள்:

அர்மீனிய தரப்பில் பாதுகாப்பு படையினர் 104 பேரும், 23 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களில் 8 பேர் அர்மீனியர்கள், 15 அஜர்பைஜானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரில் நகோர்னோ-கராபத் கிளர்ச்சி படையினரும் உள்ளடக்கமா? என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

மேலும், தங்கள் தாக்குதல்களில் அசர்பைஜான் பாதுகாப்பு படையினர் 130 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 வீரர்கள் காயமடைந்ததாகவும், அசர்பைஜானின் 29 ராணுவ டேங்கிகள் மற்றும் சில ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் அர்மீனியா தெரிவித்துள்ளது.

அசர்பைஜான் அரசு தரப்பு வெளியிட்ட விவரங்கள்:

அசர்பைஜான் தாக்குதலில் அர்மீனிய ஆதரவு நகோர்னோ-கராபத் கிளர்ச்சி படையினர் 2 ஆயிரத்து 300 பேர் கொல்லப்பட்டனர்.

அர்மீனிய ஆதரவு படைகளின் 130 டாங்கிகள், 200 பீரங்கி தளவாடங்கள், 25 விமான எதிர்ப்பு அமைப்புகள், 5 ஆயுதக்கிடங்குகள், 50 ராணுவ டாங்கி எதிர்ப்பு கருவிகள், 50 ராணுவ வாகனங்கள் அசர்பைஜான் தாக்குதலில் வீழ்த்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து 4-வது நாளாக சண்டை நீடித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »