Press "Enter" to skip to content

கடந்த 4 மாதத்தில் நாடு முழுவதும் இயல்பைவிட அதிகமழை

இந்தியாவில் கடந்த 4 மாத காலத்தில் வருடாந்திர அளவைவிட கூடுதலாக 109 சதவீத மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை கூறியுள்ளது.

புதுடெல்லி:

இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 4 மாத காலத்தில் வருடாந்திர அளவைவிட கூடுதலாக 109 சதவீத மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. ஜூன் மாதம் 107 சதவீதம், ஜூலை மாதம் 90 சதவீதம், ஆகஸ்டு மாதம் 127 சதவீதம், செப்டம்பர் மாதம் 105 சதவீதம் மழை பொழிந்துள்ளது.

2020-ம் ஆண்டு பருவகாலத்தின் முதல் காலாண்டான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்தில் 95.4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 1961-2010-ம் ஆண்டு வரையிலான நீண்ட கால சராசரியை ஒப்பிடும்போது 109 சதவீதம் அதிகமாகும்.

தென்மேற்கு பருவமழை நாட்டிற்கு தேவையான 70 சதவீத மழைப்பொழிவைத் தருகிறது. இந்த ஆண்டும் இயல்பைவிட அதிகமழையே பதிவாகி உள்ளது. இருந்தாலும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சாதாரண மழைப்பதிவையே பெற்றுள்ளன. 9 மாநிலங்களில் அதிகமழை பெய்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், குஜராத், மேகாலயா, கோவா மற்றும் லட்சத்தீவுகளில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி உள்ளன. குறைந்த அழுத்த பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சிகளால் ஒடிசா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், தெற்கு குஜராத், தெற்கு ராஜஸ்தானில் வெள்ள சேதங்களும் ஏற்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் சராசரியாக 127 சதவீத மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இது கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »