Press "Enter" to skip to content

தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது

ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

படுகாயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டுத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஹத்ராஸ் கும்பலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர்.

அப்போது அவர்களது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் யமுனா விரைவு நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »