Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் நாள்தோறும் மக்கள் அதிக இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாராகும் தடுப்பு மருந்து பரிசோதனை முயற்சியில் பாரத் பையோடெக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.  இதில் முன்னேற்றம் ஏற்பட்டு 2வது கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.  அதன் முடிவுகள் விரைவில் வரவுள்ளன.  இதுதவிர 2 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஈடுபட்டுள்ள சூழலில் கொரோனா பற்றிய ஆய்வு மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற சூழல் ஆகியவை பற்றி அறிவதற்காக கடந்த 15ந்தேதி ஆய்வு கூட்டம் ஒன்று நடந்தது.  இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இதேபோன்று, மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் பிற அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில், இந்திய கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்களின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர் மோடி, அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உதவி மற்றும் ஆதரவு வழங்க அரசு முனைப்புடன் உள்ளது என கூறினார்.

கொரோனா வைரசின் பரிசோதனை, தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை என எதுவாக இருப்பினும் முடிவில் குறைந்த விலையில், மக்களுக்கு எளிதாக மருந்து கிடைக்கும் வகையில் மற்றும் சந்தையின் தேவைக்கு ஏற்ப கிடைக்க செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் கொரோனா பாதிப்பு சூழ்நிலை, தடுப்பு மருந்து வினியோகம் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு தயாராகுதல் உள்ளிட்டவை பற்றிய ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இதில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன், பிரதமருக்கான முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மற்றும் பிற துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நமக்கு அருகே இருப்பவர்களுக்கு மட்டும் தடுப்பு மருந்து கிடைக்க செய்யும் வகையில் நம்முடைய முயற்சிகளை நாம் நிறுத்தி விட கூடாது.  தடுப்பு மருந்துகள், சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் மருந்து வினியோக நடைமுறை ஆகியவற்றுக்கான ஐ.டி. தளம் ஆகியவற்றை உலக நாடுகளு முழுவதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று உலக சமூகத்திற்கு உதவும் முயற்சியாக பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் அதனை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.  தளவாடங்கள், வினியோகம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »