Press "Enter" to skip to content

பண்டிகை நாட்களுக்கு பிறகு தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தது- சுகாதாரத்துறை செயலாளர்

பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை காவல் துறை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும்
மருத்துவமனை ‘டீன்’ மருத்துவர் பாலாஜி, காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு, சாலை விதிகளை
பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சற்று ஆறுதல் தருகிறது. கொரோனா
பாதிப்பு குறைகிறது என பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. ஏனென்றால், பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகு தான் பாதிப்பு
எண்ணிக்கை அதிகமானது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்க வெளியே செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். இது போன்ற நேரங்களில்
பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகம் வெளியே வருவார்கள் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பொருட்களை விற்பனை செய்ய
வேண்டும் என வணிகர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் தற்போது குறைய தொடங்கி
உள்ளது. இது தொடர்ந்து நீடித்து கொரோனா முற்றிலுமாக இல்லை என்ற நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சென்னை காவல் துறை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கூறும்போது, ‘சென்னையில் விபத்துகள் எண்ணிக்கை தற்போது
குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 50 சதவீத விபத்துகள் குறைந்து இருக்கிறது. மேலும் சாலை விதிகளை மீறுவோர்
மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக சென்னையில் 65 சாலைகள்
கண்டறியப்பட்டு, அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றி, சாலை குறியீடு மற்றும் வாகனம் நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை சரிசெய்யும் பணி நடைபெற்று
வருகிறது.

இதேபோல் சென்னையில் இன்னும் பல்வேறு சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விபத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக விபத்து
தடுப்பு நாளான இன்று (நேற்று) பொதுமக்களுக்கு சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் மோட்டார் மிதிவண்டி
பந்தயம் வைத்து அதிவேகமாக செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் முககவசம், ‘தலைக்கவசம்’ இரண்டுமே அவசியம். சென்னை காமராஜர் சாலையில் முதற்கட்டமாக வைக்கப்பட்ட
‘எல்.இ.டி. சிக்னல்’ பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் இன்னும் பல இடங்களில் இது போல்
‘எல்.இ.டி. சிக்னல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் மற்றும் மருத்துவ பேராசிரியர் மருத்துவர் கணேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள்,
செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »