Press "Enter" to skip to content

குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்?

தனது குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை என்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டன்:

தனது குடும்பத்தை நடத்த, தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயரை வெளியிட விரும்பாத ஆளும் கட்சி எம்.பி.க்கள் 2 பேர் அளித்த தகவலின் பேரில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது 1 லட்சத்து 50 ஆயிரத்து 402 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரம்) ஊதியமாக பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் (சுமார் ரூ.21 லட்சத்து 91 ஆயிரம்) ஊதியமாக பெற்று வந்தார்.

போரிஸ் ஜான்சனுக்கு 6 குழந்தைகள், அவர்களில் சிலர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான செலவுகளை போரிஸ் ஜான்சன் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவரது முன்னாள் மனைவி மரினா வீலருக்கு, விவாகரத்து நடைமுறைப்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டி உள்ளது.

டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு வரை போரிஸ் ஜான்சன், 2 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டகளை (சுமார் ரூ.2 கோடியே 61 லட்சத்து 93 ஆயிரம்) ஆண்டு வருமானமாக பெற்று வந்துள்ளார். மாதத்துக்கு 2 மேடைப்பேச்சுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுகளை (சுமார் ரூ.1 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரம்) வருவாயாக ஈட்டினார். தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் அடுத்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »