Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி

பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள குல்ஷன் இ இக்பால் என்ற இடத்தில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. மற்ற 3 தளங்களிலும் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்தப்பகுதியே அதிர்ந்தது.

குண்டுவெடிப்பால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாக பரவியது. மேலும் குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் மிதிவண்டிகள் தீக்கிரையாகின.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் எரிந்த தீயை அணைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »