Press "Enter" to skip to content

7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு

7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என அறிவித்துள்ள தமிழக கவர்னரை கண்டித்து நாளை மறுநாள் திமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை:

மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 

நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உள் ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக ஆளுநர் புரோகித்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். 

திமுக தலைவர் முக ஸ்டாலினின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மேலும் 3 முதல் 4 வார காலம் அவகாசம் தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநர் புரோகித்தை கண்டித்தும், அதிமுக அரசை கண்டித்தும் நாளை மறுநாள் சனிக்கிழமை (24.10.2020) திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை முன் இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

மருத்துவக் கல்வியில் 7.5%  இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை;  அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன்; 

தமிழக முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக!  அக்டோபர் 24-இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்!

மாணவர் நலன் காப்போம்!

என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »