Press "Enter" to skip to content

தீபாவளிக்கு நிவாரண தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

தீபாவளிக்கு நிவாரண தொகையாக ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

வத்திராயிருப்பு:

முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி எழுதிய “எனது அரசியல் பயணம்“ என்ற நூல் வெளியீட்டு விழா வத்திராயிருப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வருகிற தீபாவளிக்கு நிவாரண தொகையாக ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும். பெண் குற்றச்சாட்டுக்கு உள்ளான சுப்பையா சண்முகம் என்பவரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினராக சேர்த்தது மிகவும் கண்டனத்திற்கு உரியது. எனவே அவரை நிர்வாகக்குழுவில் இருந்து நீக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கினால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தும் முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் ஒரு நாள் இரவில் பெய்த மழை சென்னையை சீரழித்து உள்ளது. எனவே மழைநீர் வடிய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தாமரை இதழ் ஆசிரியர் மகேந்திரன், முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், ஒன்றிய பெருந்தலைவர் சிந்து முருகன், தி.மு.க. நகர ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் மல்லி ஆறுமுகம், குன்னூர் சீனிவாசன், முனியாண்டி, அய்யாவு பாண்டியன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் மணி கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »