Press "Enter" to skip to content

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் (2020-2021) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கு மேல் சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கெ.ஜெயராஜ் போற்றி, எம்.ரஜிகுமார் ஆகியோரின் அபிஷேக சடங்கு சன்னிதானத்தில் நடைபெறும். அதை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டுவார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது. இதை தொடர்ந்து நடை அடைக்கப்படும்.

மறுநாள் (திங்கட்கிழமை) கார்த்திகை 1 முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். புதிய மேல்சாந்தி வி.கெ.ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

தினசரி வழக்கமான பூஜைகளுடன் உஷபூஜை, உச்ச பூஜை, நெய்யபிஷேகம் புஷ்பாபிஷேகம், உதயா ஸ்தமன பூஜை, சகஸ்ர கலசபூஜை, படி பூஜை, கலசாபிஷேகம் உள்பட அனைத்து பூஜை, வழிபாடுகள் நடைபெறும். தினசரி பூஜை இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அதன்பின் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதியும் நடைபெறும். பருவத்தை முன்னிட்டு, நடை திறப்பதையொட்டி நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான காவல் துறையினர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டு உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கனவே கணினிமய மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் என நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்றிதழ் இல்லாத பக்தர்கள் கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளி விட்டு மலை ஏறவேண்டும். இதுமட்டுமின்றி சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.

பருவம் தொடங்குவதையொட்டி கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து, கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் நிலக்கல் வரை இயக்கப்படும். அங்கிருந்து செயின் சர்வீஸ் மூலமாக பக்தர்கள் பம்பைக்கு அழைத்து வரப்படுவார்கள். கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க சுகாதாரத்துறை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »